Thursday, October 22, 2020

புரியாத புதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாராளுமன்ற நகர்வுகள்



இலங்கையின் அரசியலமைப்பின் 20 ஆவது  திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டமை அறிந்ததே. 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதில் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர். 

ஆதரவாக வாக்களித்த 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவரான எம்.எஸ் . தௌபீக் 20வது திருத்தம் தொடர்பான விவாதம் ஆரம்பமான வேளை ' 20வது வேண்டாம்' என்ற பட்டியை கையில் அணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழு நிலை விவாதத்தின் போது, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலான சரத்திற்கு தனியாக வாக்கெடுப்பு கோரப்பட்டது.

இந்த சரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்தார்.

எவ்வாறாயினும் இறுதி வாக்கெடுப்பின்போது அவர் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நிமிடங்களுக்கு முன்னர் எதிராக வாக்களித்துவிட்டு ஏன் அவர் ஆதரவாக வாக்களித்தார் என்பது புதிராகவே உள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப்பட்டியல் பாராளும்ன்ற உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட டயானா கமகே 20வது திருத்தத்திற்கு  ஏன் ஆதரவாக வாக்களித்தார் என்பதும் பலருக்கு கேள்வியாகவுள்ளது.  இராஜாங்க அமைச்சுக்காக அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ள டயானாவிற்கு எதற்காக சஜித் தேசியப்பட்டியலைக் கொடுத்தார் என்று சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர். 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் டயானா கமகே இழைத்தமை மிகப் பெரிய துரோகத்தனம் என்ற வகையிலும் டுவிட்டரில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.  ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பிரிந்துவந்த நிலையில் உடனடியாக மாற்றுக்கட்சியொன்றை பதிவுசெய்யமுடியாத நிலையில் ஏற்கனவே டயானா கமகேயும் அவரது கணவரும் பதிவுசெய்துவைத்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியை பயன்படுத்திக்கொள்வதற்காக அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமையையும் கட்சியின் துணைச் செயலாளர் பதவியையும் வழங்கினர் என்றவகையிலும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. 

ஆனாலும் 20வது திருத்தத்திற்கு  ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.  


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவரான நஸீர் அஹமட் தாம்  அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான காரணம் தொடர்பாக உரையில் கூறிய காரணம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. 

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தனது டுவிட்டர் தளத்தில் கடுமையான விமர்சனத்தை நஸிர் அஹமட்டின் உரைதொடர்பாக முன்வைத்திருந்தார்.

"பலம்வாய்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்காக  வாக்களிக்கின்றீர்கள் என்றால் அது ஒருவிடயம் ஆனால் உங்களது வாக்குகளை விற்றுவிட்டு அதனை நியாயப்படுத்துவதற்காக  ஈஸ்டர் தாக்குதலையடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளுக்காக எதிர்க்கட்சி மீது குற்றஞ்சாட்டுவதெல்லாம் அபத்தமானது சமூகத்தின் மீது முகத்தில் அறைந்தது போன்றுள்ளது. கொள்கைகளுக்கும் கௌரவத்திற்கும் மேலாக பதவிக்காக ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது மிகவும் கேவலமானதாகும் பணத்திற்காகவும் அமைச்சர் பதவிக்காகவும் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் சமூகத்தை  கீழே தள்ளுவது அசிங்கத்தனமானது . முஸ் லிம்களுக்கு இது ஒரு துன்பகரமான நாளாகும் . வெட்கக்கேடு என நஸீர் அஹமட்டை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார் அலிஸாஹிர் மௌலானா. 


No comments:

Post a Comment