Wednesday, October 7, 2020

பிரண்டிஸ் ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை--இராணுவத் தளபதி


மினுவங்கொட, திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தற்போது இனங்காணப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்த பிரண்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக பரப்பப்பட்ட தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என கொவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவராக செயற்படும் இராணுவத்தளபதி லெப்டினற் ஜெனரல் சவேந்திர சில்வா தெரித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது மினுவங்கொடவிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்துசென்றதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி தாம் விசாரித்துப் பார்த்ததில் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில்  கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்த நிலையிலும் மற்றும் 5ம் தர புலமைப்பரிட்சைகளைத் முன்கூட்டியே திட்டமிட்டபடி நடத்துவதற்கு அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் இருந்து இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளபோதிலும் வெளிநாடுகளில் அந்தரித்து நிற்கும் புலம்பெயர் இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை இராணுவத்தளபதி தெரிவித்தார். 

அத்தோடு நாட்டை முடக்கும் திட்டம் உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,நாட்டின் பிந்திய நிலைமையை அரசாங்கமும் நிபுணர் குழாமும் அவதானித்து  ஆராய்ந்துவருவதாகவும் இந்த மணிநேரம் வரை நாட்டை முடக்கும் திட்டம் இல்லை எனவும் கூறினார்.


No comments:

Post a Comment