Wednesday, January 13, 2021

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா?

 


நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்காண்டு கால கடூழிய சிறைத்தண்டனை   பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னணி சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அவரது பாராளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம்  நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி நேற்றையதினம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி விசாரணை நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதிகளான சிசிர டீ. ஆப்ரூ மற்றும் பிரீதீ பத்மன் சூரசேன, விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் குழாம் மூலம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தீர்ப்பை வெளியிட்ட மேற்படி நீதிபதிகள் குழாம் தலைவர் சிசிர டீ. ஆப்ரு தெரிவிக்கையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சட்ட மாஅதிபரினால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதித்தல் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். அந்தவகையில் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவாளியாக தீர்ப்பிடப்படுகின்றாரென்றும் அவருக்கு 04 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான சுனில் பெரேராவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்தைகளையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் மோசடிக்காரர்களெனத் தெரிவித்துள்ளார். மேற்படி கருத்துக்களின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார். அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரென அவருக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment