Monday, January 4, 2021

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் நாளைய விஜயத்தின் முக்கியத்துவம் என்ன?

 



2021 ஆண்டு பிறந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முக்கியமான வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் திகழ்கின்றார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில்  நாளை 5ம் திகதி வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 7மத்திகதி வரை இலங்கை விஜயத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் இலங்கை அரசியல்தலைவர்களுடனும் இருதரப்பு உறவுகள் தொடர்பான அனைத்துவிடயங்களையும் இந்த விஜயத்தின் போது அவர் கலந்துரையாடுவார் என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புத்தாண்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இலங்கைக்கான விஜயம் அமைந்திருப்பது இலங்கையுடனான உறவிற்கு இந்தியா எந்தளவு முக்கியத்தும் கொடுக்கின்றதென்பதைக் காண்பிப்பதாகவும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இந்த இந்த விஜயம் அமையும் எனவும் இந்தியத்தூதரகத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 இந்த விஜயத்தின் போது தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு   போன்ற வழமையான  கரிசனைக்குரிய விடயங்களுக்கு மேலாக கடந்த சில ஆண்டுகளாக தாமதடைந்துவருகின்ற கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரம் முக்கிய கவனம் பெறும் என இந்திய அரசியல் ஆய்வாளரொருவர் சுட்டிக்காட்டினார். 

 இதற்கான உடன்படிக்கை 2017ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டபோதும் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை  ஆரம்பிப்பதில்  இந்தியாவை உள்ளடக்கிச் செயற்படுவதில் காண்பிக்கப்படும் தாமதம் மற்றும் திருகோண மலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் கோபரேஷன் நிறுவனம் மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுஸ்தாபனம் ஆகியவற்றிற்கிடையிலான கூட்டு முயற்சியாக மேலும் அபிவிருத்திசெய்தல் போன்ற விடயங்களும் ஆராயப்படும்  வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அண்மைக்காலமாக மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கவேண்டும் என ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் கடும்போக்கு சிங்கள பௌத்த மதத்தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில்  இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 


No comments:

Post a Comment