Thursday, January 21, 2021

அட்டுலுகமவில் சுகாதார அதிகாரிகளுக்கு உமிழ்ந்தவருக்கு 6 வருட சிறை

 



களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த வருடம் டிசம்பர் 02ஆம் திகதி, தனிமைப்படுத்தலுக்காக நபர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்த சுகாதார அதிகாரிகள் மீது உமிழ்ந்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபருக்கு 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (21) பாணந்துறை நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பில், குறித்த சந்தேகநபர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றாமை, அரசாங்க ஊழியர்கள் மீது முறையற்ற வகையில் நடந்து கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, சந்தேகநபருக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகள் நிரூபணமானதைத் தொடர்ந்துஇ ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா இரு வருடங்கள் என 6 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 4 சுகாதார அதிகாரிகளுக்கும் தலா ரூபா ஒரு இலட்சம் வீதம் ரூபா 400,000 இழப்பீட்டை வழங்குமாறு சந்தேகநபருக்கு உத்தரவிட்ட நீதவான், அவ்வாறு வழங்கத் தவறும்பட்சத்தில் குறித்த இழப்பீட்டிற்காக தலா 6 மாதங்கள் வீதம் மேலும் இரு வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment