Saturday, January 2, 2021

போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சோம்-பாதுகாப்பு செயலாளர் சூளுரை

 


இலங்கையில் யுத்தக் குற்றங்கள் என்று எதுவுமே இடம்பெறவில்லை. மாறாக தாம் மனித நேய நடவடிக்கையையே முன்னெடுத்திருந்ததாக   இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். 

இலங்கை இராணுவம் மனித உயிர்களை பாதுகாக்க போரிட்ட இராணுவம் என்பதால் மனிதவுரிமைச் செயற்பாடுகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த விடயம் மீண்டுமாக அவதானத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இதுதொடர்பாக புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கு மேற்குலக நாடுகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையிலும் பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

2021ம் ஆண்டில் பிரிவினைவாதத்திற்கோ பயங்கரவாதத்திற்கோ இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான முயற்சிகளை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"போதைப்பொருள் கடத்தல் நாட்டில் குறைந்துள்ளது. என்றாலும் சில சில இடங்களில் அவை பரிமாற்றப்படுகின்றன. போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். புத்தாண்டில் இதற்கும் மேலதிகமான நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம்.

அடிப்படைவாதிகளும் தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் மீண்டும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இளைஞர்கள் ஆயுதங்களை மீண்டும் தூக்குவார்களென அண்மையக்காலமாக கருத்துகள் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று ஒருவர் இருந்தார். அவர் ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு நாட்டை துண்டாட முற்பட்டார். என்றாலும் அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் ஒருதுளி பாதிப்பேணும் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் 2009ஆம் ஆண்டுமுதல் எமது இராணுவத்தின்மீது சுமத்தப்பட்டன. நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம் என்பதால் மனிவுரிமைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை" என்றார்.

இதேவேளை எதிர்வரும் ஜெனிவா அமர்வில் இலங்கை கடும் நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment