Saturday, March 14, 2009

எதிர்காலம் குறித்து ஏங்கும் மக்களை சந்தித்தபோது !வன்னிப்பகுதியில் யுத்தநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கே சிக்கித்தவிக்கும் பொதுமக்களின் நிலை பற்றி வார்த்தைகளால் எளிதில் வர்ணித்திடமுடியாது.

கடந்த இரண்டுவருடப்பகுதியாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களில் ஒருபகுதியினர் கடந்த ஒருசில மாதங்களாக அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் அடைக்கலம் தேடி வந்துள்ளனர் வன்னியின் இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 32597 பேர் வவுனியாவிலுள்ள 13 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி எஸ் எம் சாள்ஸ் தெரிவித்தார் .


உயிர்பிழைத்தால் மட்டுமே போதும் என்ற நோக்குடன் வவுனியாவிற்குள் வந்துள்ள மக்களை மறியல் காரர்களைப்போன்று அடைத்துவைத்துள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அண்மையில் பாராளுமன்றக்கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டியிருந்தது .இதற்கு பதிலளித்த அரசாங்கம் இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்துவரும் மக்களோடு கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் ஊடுருவியுள்ளமை காரணமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்திருந்தது .இந்த நிலையில் கடந்தவாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் சேர் ஜோன் ஹோம்ஸ் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக தமக்கு முக்கிய மூன்று கரிசனைகள் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இராணுவகட்டுப்பாடற்ற பகுதியில் இருந்து வருகைதரும் மக்களை சோதனைக்குட்டுபடுத்தி தகவல்களை அட்டவணைப்படுத்துவதில் பகிரங்கத்தன்மை பேணப்படல் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதியளித்தல் மற்றும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் இராணுவத்தினரின் பிரசன்னம் ஆகிய தமது கரிசனைகள் தொடர்பிலேயே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கபபட்டுள்ள முகாம்களிற்கு சென்றுபார்வையிட உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்படவில்லை என வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து சுமார் நாற்பது ஊடகவியலாளர்கள் அங்கு அழைத்துச்செல்லப்பட்டனர் .


வவுனியாவிலுள்ள மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக்கிராமம் மற்றும் அருவிக்கோட்டம் சிவானந்த வித்தியாலம் ஆகிய இடம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்


இதில் பெரிய முகாமாக திகழும் மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக்கிராமத்தில் 2754பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 565 தற்காலிக குடியிருப்புகளிலும் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளநிலையில தற்போது 150 தற்கர்லிக குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுவருவதாக வவுனியா அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார். அங்கு சென்று மக்களுடன் உரையாடிய போது கடும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து உயிரோடு வந்துசேர்ந்ததே பெரும் விடயம் என அவர்கள் பெமூச்சுவிடுவதை உணரமுடிந்தாலும் உளக்குமிறல்களும் உடனோடிவருகின்றன.


இரண்டு வருடங்களில் 14தடவைகள் இடம்பெயர்ந்தோம் !


ஜுலியட் (45வயது)

(மடுதான் எங்கட சொந்த ஊர் சண்டை ஆரம்பமானதும் அங்கிருந்து இடம்பெயரத்தொடங்கினோம் தொடர்ச்சியாக குண்டுகளதும் துப்பாக்கிகளது சத்தமும் தான் எம்மோடு கூடவே வந்தனர் தட்சணாமருதமடு பெரிய மடு வெள்ளாங்குளம் இப்படியாக இடம்பெயர்ந்து இறுதியிலே இருட்டுமடுவிலே தங்கியிருந்தோம் அங்கே பங்கருக்குள்ளேயே இருந்தோம் பங்கருக்குள் இருந்து தலையை வெளியில எடுத்தாலே ஆபத்து என்ற நிலை உணவு சமைப்பதற்காக போவோம் என்று கூறி பங்கருக்குள் இருந்து வெளியேறி சில அடிகள் செல்வதற்குள்ளேயே ஷெல் துண்டுகள் பட்டு செத்தவர்களையும் நாங்க கண்ணாலே கண்டோம் உடல்களை அடக்கம் செய்யமுடியாத நிலையில் பங்களுக்குள்ளேயே போட்டுட்டு வந்துவிட்டோம் கடந்த இரண்டு வருடகாலத்தில் 14தடவை இடம்பெயர்ந்தே இறுதியாக இங்கு வந்துசேர்ந்தோம் இங்கே உணவும் அப்பிடி இப்படித்தான் பற்றாக்குறையாவுள்ளது எங்கட சொந்தக்காரங்க வவுனியாவில் இருக்கிறாங்க அவங்களைபார்க்க எமக்கு அனுமதியில்லை


எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ?

பேரம்பலவாணேஸ்வரக்குருக்கள் ( 58வயது)

“இந்த முகாமிற்குள் கிறிஸ்தவக்குருக்கள் இல்லை பௌத்த பிக்குகள் இல்லை மௌலவிமார் இல்லை” ஆனால் சைவக்குருக்களான எங்களை இங்கு கொண்டுவந்துவிட்டுள்ளனர் என்னைத்தவிர ஆறு சைவக்குருக்களின் குடும்பங்களும் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர் நாங்கள் மட்டும் ஆன்மீக வாதிகள் இல்லையா ஏன் எமக்குமட்டும் இப்படியான புறக்கணிப்பு இங்கு தற்காலிகமாக கோவிலொன்றை அமைத்துள்ளனர் அது ஆகம விதிகளுக்கு எந்தவகையிலும் உட்படவில்லை விக்கிரகங்கள் இல்லை நாங்கள் விக்கிரகங்களுக்கு அன்றி தெய்வப்படங்களுக்கு பூஜைசெய்வது கிடையாது ஆனால் செய்யவேறுவழியின்றி பூஜை செய்யவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது இங்கிருந்து வெளியே போக வரமுடியாது தொற்றுநோய்பரவுவதாகக்கூறி அருகிலுள்ள (கல்லாறு) ஆற்றிலும் குளிப்பதற்கு சுகாதாரப்பிரிவினர் தடைவிதித்துள்ளனர் இங்கே ஓரே சொறியும் கடியுமாக இருக்குது இலையான்களின் தொல்லையே பெருந்தொல்லையாக இருக்கு வன்னியில் நாங்கள் உயிருக்கு உத்தரவாதமற்ற பெரிய திறந்தவெளிச்சாலையில் இருந்தோம் தற்போது இங்கு சிறிய திறந்தவெளிச்சிறைச்சாலையில் இருப்பதாக உணருகின்றோம் எதிர்காலத்தில் உயிருக்கும் உத்தரவாதம் இருக்குமோ என்பதை சரியாக கூறமுடியவில்லை”


ம.தமிழிளவன் ( 8வயது )


“நாங்க இங்க வரமுன்னர் இருட்டுமடுவில் இருந்தோம் அங்கே கடைசியாக 20 நாட்கள் வரை பங்கருக்குள்ளேயே இருந்தோம் அந்தபங்கருக்குள்ளே 40பேர் வரை இருந்தனர் நாங்க இருந்த பங்கருக்கு அருகிலும் ஷெல்கள் வந்து வெடித்தது ஒரே சத்தம் காலையிலும் ஷெல்விழும் இரவிலும் விழும்”


நாங்க இந்தியா திரும்ப உதவிசெய்யுங்க ….

வவுனியா அருவிக்கோட்டம் சிவானந்தா வித்தியாலய முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள துர்க்காதேவி துரைரட்ணம் தாம் ஒரு இந்தியப்பிரஜை என்றும் தம்மை இந்தியா அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

துர்க்காதேவி துரைரட்ணம்

“நான் ஒரு இந்தியபிரஜை சொந்த ஊர் மதுரை எனது கணவர் வடிவேல் துரைரட்ணம் (வயது 44) இலங்கையைச்சேர்ந்தவர் சுகவீனமுற்ற எனது கணவரின் தாயாரைப்பார்க்வென்று 2006ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி மதுரையில் இருந்து கிளிநொச்சிக்கு பிள்ளைகளுடன் வந்தோம் ஆனால் சண்டை ஆரம்பித்ததால் அங்கு மாட்டிகொண்டோம் எங்களை இங்கிருந்து வெளியே அழைத்துச்சென்று இந்தியாவிற்கு அனுப்பிவைக்க தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்”


மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக்கிராமத்தில் மாத்திரம் 430 மாணவர்கள் உள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியநிலையில் மரநிழல்களில் தற்காலிகமாக நடத்தப்பட்டுவருகின்ற வகுப்புக்களை எம்மால் அவதானிக்க முடிந்தது நாம் சென்ற தினம் சிவராத்திரி விடுமுறை தினமாக இருந்தபோதும் சீருடைகளுடன் பல மாணவர்களைக்காணமுடிந்தது


செ.சோபிகா (வயது 15)

(சண்டையால 2008 மூன்றாம் மாதத்திற்கு பிறகு எமக்கு படிக்ககிடைக்கவில்லை இப்ப ஒருகிழமையாத்தான் படிக்கத்தொடங்கினோம் இங்கிருப்பது எமக்கு பாதுகாப்பாக இருக்கு ஷெல் இல்லை விமானங்கள் குண்டு போடும் என்ற பயமில்இங்கே குளிக்கிறத்துக்கு காலையில 5மணிக்கே எழும்பவேண்டும் பிறகு ஏழரை எட்டுமணிக்குத்தான் குளித்துவிட்டு வரமுடியும் அதால வகுப்புகளுக்கு நேரம்பிந்தித்தான் வரமுடிகின்றது )

மாணவர்கள் சிலர் தமது சொந்த ஊரில் வாழ்ந்த வாழ்க்கையையும் நினைவுபடுத்தினர் .
தெ துவாரகா ( 13வயது)
(எங்கட ஊர் கிளிநொச்சி இரத்தினபுரம் அங்க எங்கட அப்பா கமம்தான் செய்தவர் அம்மா தைக்கிறவா எங்களட்ட நிறைய காணிகள் தோட்டங்களெல்லாம் இருக்கு அங்க நிறைய பயிர்செய்திருந்தனாங்க ஆன சண்டையால எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடி உயிர்தப்பினாப்போதும் என்று வந்தானாங்க வீட்டில ஐந்தாறு மாடுகள் மற்றது டிரக்டர்கள் மோட்டர் பைக்குகள் எல்லாம் இருக்கு ஆனா இப்ப இங்க எதுவும் இல்லாம இருக்கு எங்கட சித்திமார் எல்லாம் வவுனியாவில தான் இருக்காங்க அவங்ககூட இருந்து படிக்கத்தான் எனக்கு விருப்பம் இங்கயிருந்து படிக்க விருப்பமில்லாம இருக்கு குளிக்கிறதென்றா விடியவெள்ளணைக்கே போய் நிக்கணும் வேற இங்க ஒரே இலையான இருக்கு


ம மயூரன் (15வயது) “எங்க சொந்த இடம் கனகராயன் குளம் அங்க எங்களட்ட 100 மாடு இருந்தி;ச்சி அதெல்லாம் எங்க போயிருக்குமோ தெரியாது எனக்கு மிகவிருப்பமான மாடு சூப்பிரியா அதை ஒருநாளும் பார்க்காம இருந்ததில்லை அதில்லாதது தான் எனக்கு பெரிய கவலையா இருக்கு”


ஜோ ஷொஷிங்டன் (14வயது )


பூநகரி பள்ளிக்குடாதான் எங்கட சொந்த ஊர் அங்கே எங்கவீட்டில இரண்டு இரண்டு படகுகளும் ஒரு சூசுகி எஞ்சினும் இருந்திச்சு படகில் ஒன்று சீநோர் போட்டு மற்றது சுப்பர் போட்டு (படகு)


பா பிரபாகரன் -தொண்டர் ஆசிரியர் (30 வயது )


“நான் நெடுங்கேணியைச்சேர்தவன் அங்குள்ள பாடசாலையில் ஆங்கிலமும் விஞ்ஞானமும் படிப்பித்துவந்தேன் நெடுங்கேணியில் மோதல் ஆரம்பமானதும் அங்கிருந்து ஒட்டுசுட்டான் போய் மீண்டும் நெடுங்கேணி வந்தே இராணுவத்தினர் பகுதிக்கு சென்றோம் இந்த முகாமிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்க எம்மால் இயன்றவரை முயற்சிக்கின்றோம் இங்கு 11தொண்டர் ஆசிரியர்கள் அடங்கலாக 38 ஆசிரியர்கள் உள்ளனர் இங்குள்ள மாணவர்களில் புதிதாக வந்தவர்கள் எட்டுப்பாடத்தையும் ஒரே கொப்பியில் தான் குறிப்பெடுக்க வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது” அத்தோடு காலையில் குளித்துவிட்டு வருவதற்கு நேரம் எடுப்பதால் அனேகமான மாணவர்கள் நேரம் பிந்தியே வகுப்புகளுக்கு வருகின்றனர் இந்த குறைபாடுகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என நான் நம்புகின்றேன்”


யோகராசா ( 53வயது)

(நாங்க புளியம்பொக்கணையைச்சேர்ந்தவங்க எங்களுக்கு கமத்தொழிலைத்தவிர வேற தொழில் தெரியாது ஊருக்கு போயி மீண்டும் எங்கட தொழிலை செய்யணும் அதுதான் எங்கட கோரிக்கை பிள்ளைகளை வன்னியில பிடிக்க தொடங்கினதாலதான் நாங்க அங்கிருந்து தப்பிவந்து இராணுவத்தினர் பக்கம் வந்துசேர்ந்தோம் பிள்ளைக்கு 18வயது நேற்றுத்தான் முடிந்தது இல்லாட்டி அவைய பிடிச்சிருப்பாங்க ஒருமாதிரி தப்பி வந்துவி;ட்டோம் எங்கட சொந்தக்காரங்க வவுனியாவில் இருக்கிறாங்க எங்களை அங்க போகவிட்டால் நிலைமை ஒரளவு சரியாகிடும் )


தர்மலிங்கம் (வயது 53) “இந்த மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் இப்படித்தான் குறைப்பட்டு பொய் கூறுகின்றனர் இவங்களை நம்பாதீங்க இராணுவமும் அரசாங்கமும் எல்லாவற்றையும் செய்துதந்துள்ளாங்க வன்னியில் இவங்க இதைவிட கஸ்டத்திற்குள் இருந்துவிட்டு இப்ப எதை எதையோ சொல்லுறாங்க வன்னிமக்கள் பெரிய வீடுகளில் இருக்கவில்லை குடிசைகளில் இருந்து விட்டு இப்படி பொய்களைக் கூறுகின்றாங்க இவங்களை நம்பாதீங்க”


ஊடகவியலாளர்கள் முகாம் பகுதிக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்துகொண்ட பல இளைஞர்களும் ஒருசில வயோதிபர்களும் தாமாகவே முன்வந்து தமது குறைகளை கூறமுனைந்தனர் அப்போது முகாமைச்சுற்றிலும் முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் வருகைதந்துள்ளதன் காரணமாகவே சில முட்கம்பிச்சுருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பெயர்களை இனங்காண்பித்துக்கொள்ளவிரும்பாத பலர் தெரிவித்தனர். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே புதிதாக வருகின்றவர்களுக்காக கொட்டில்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மாறாக அதனை தொழில் என்று கூற முடியாது இங்குள்ளவர்களை வெளியே சென்றுவர அனுமதித்தால் அவர்கள் எதையாவது சம்பாதித்துவரமுடியும். ஆனால் வெளியே செல்ல அனுமதி கிடையாது ஆரம்பத்தில் ஒருசிலநாட்கள் உறவினர்களைப்பார்வையிட அனுமதியிருந்ததெனினும் அது தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது நாம் இங்கு வரும் போது எம்முடன் எதையுமே எடுத்துவரவில்லை உயிர்பிழைத்தால் போதும் என்று பிள்ளைகளையும் உறவுகளையும் மட்டுமே சுமந்துவந்தோம் அதிலும் சில உறவினர்கள் வேறு வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் இங்குள்ளவர்களின் உறவினர்கள் பலர் வவுனியாவில் உள்ளனர் அங்கு செல்ல அனுமதித்தாலே எமதுநிலை ஒரளவு மேம்பட்டுவிடும் என அவர்கள் கூறினர்


வெளியே சென்றுவர அனுமதியின்மை உறவினர்களைப்பார்க்க முடியாதநிலைபோன்ற அங்குள்ள மக்களின் குமிறல் தொடர்பாகவும் முகாம்பகுதியில் இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்பாகவும் எம்மோடு வருகைதந்திருந்த இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவினேன் “ இந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எமது பாதுகாப்பிற்காகவே நிறுத்தப்பட்டுள்ளனர் குறிப்பாக ஊடகவியலாளர்களும் இராணுவ உயரதிகாரிகளும் வருகைதந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது இங்கு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து மக்களோடு மக்களாக ஊடுருவியுள்ள உறுப்பினர்களும் உள்ளனர் அந்தவகையில் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் இங்குள்ள அமைதிநிலை குழப்பப்பட்டுவிடக்கூடாது பாதுகாப்பு காரணங்களுக்காகவே நாம் தற்போது இங்குள்ளவர்களை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை அவர்களுடைய பாதுகாப்பிற்கும் நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாமே பதில் கூறவேண்டும் ஆனால் இன்றியமையாத தேவை இருப்பவர்கள் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்” என இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்


அரிசி மா சீனி பருப்பு போன்றவை தமக்கு தற்போது மாதம் ஒருமுறை ஒட்டுமொத்தமாக வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர்கள் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு சமைக்க முடியுமா என கேள்வியெழுப்பினர் ஆரம்பத்தில் மரக்கறி வழங்கப்பட்டபோதும் தற்போது அவை வழங்கப்படுவதாக அவர்கள் குறைப்பட்டுக்கொண்டனர் மீன் வாங்கவோ மரக்கறி வாங்கவோ மட்டுமன்றி தமது குழந்தைப்பிள்ளைகளுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுக்க கூட தம்மிடம் எவ்விதப்பணமும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்
ஊடகவியலாளர்கள்
ஒருமுறை மட்டும் வந்துவிட்டுப்போனால் உண்மைநிலைமையை வெளிக்கொண்டுவரமுடியாது அடிக்கடி நீங்கள் வரவேண்டும் எனவும் அவர்கள் வினயமாக வேண்டிக்கொண்டனர் மெனிக்பாம் பகுதிக்கு வருகைதந்த அரச அதிபரிடம் இந்த மக்களின் குறைப்பாடுகள் தொடர்பாக வினவியபோது தற்போதைய நிலையில் இலங்கைப்பிரஜைகளுக்கு செய்யக்கூடிய அதிகூடியபட்சமானவற்றையே இந்த மக்களுக்கு செய்துள்ளதாக குறிப்பிட்டதுடன் இதற்காக சுமார் முந்நூறு மில்லியன் ருபாவை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாகவும்

காலப்போக்கில் நிலைமை முன்னேற்றமடையும் என நம்பிக்கை வெளியிட்டார்
தற்போதயை நிலையில் தம்முடன் இணைந்து 40 அரசசார்பற்ற நிறுவனங்களும் பணியாற்றிவருவதாக அவர் குறிப்பிட்டார் ஆரம்பத்தில் வெளியார் பார்வையிட அனுமதித்ததாக குறிப்பிட்ட அரச அதிபர் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதையடுத்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார் வவுனியாவில் நிர்வாக நடவடிக்கைகளை பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே முன்னெடுத்துவருவதாக குறிப்பிட்ட அவர் அந்த ஸ்திரப்பாட்டை குலையாது காக்க வேண்டியதேவையுள்ளதாகவும் குறிப்பிட்டார் எதிர்காலத்தில் வவுனியாவிற்குள் இரண்டு லட்சம் இடம்பெயர்ந்தவர்களை உள்வாங்கத்தக்கவகையில் அரசாங்கம் திட்டங்களைத்தயார் செய்து வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சாள்ஸ் இதற்காக ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

இந்த முகாமில்தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் மனங்களில் இருக்கும் பொதுவான மற்றுமொரு ஆதங்கம் எப்போது சொந்த இடங்களுக்கு திரும்புவோம் என்பதாக இருந்ததை அவர்களுடனான உரையாடல்களின் போது உணரமுடிந்ததென்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்


இந்த முகாமிற்குள் வந்துவிட்டதால் தற்போதைக்கு குண்டுகளின் அச்சம் இல்லை என்ற ஒருவித நிம்மதி உணர்வு அனேகருக்கு இருக்கின்றபோதும் எதிர்காலம் என்னவாகுமோ என்ற ஆதங்கத்தை அவர்களது ஏக்கம் நிறை முகங்களும் சொல்லாமல் சொல்லத் தவறவில்லை !


Published in Virakesari 26/02/2009

1 comment:

  1. I believe this is my best work in my journalism career

    ReplyDelete