Monday, March 16, 2009

அரசாங்கம் மனிதநேய தொண்டுநிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேற்ற எடுத்துள்ள தீர்மானம் சர்வதேச சமூகத்தால் சாதகமானமுறையில் பார்க்கப்படும் என நான் கருதவில்ல




வன்னியில் பணியாற்றும் மனித நேய நிறுவனங்கள் அமைப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமையானது அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்வியை எழுப்பியுள்ளதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிக்கின்றார்

எமக்களித்த பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்


பேட்டி கண்டவர் ஆ அருண்

கேள்வி:வன்னியில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுவை எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?

பதில்

(இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் வன்னியின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதனையே இது கோடிட்டுக்காட்டுகின்றது. மனிதாபிமான நிறுவன பணியாளர்களை வன்னியிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கூறுவதற்கு காண்பிக்கும் காரணமாக அவர்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் அங்கு தங்கியிருந்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க முடியாதெனவும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. மனிதாபிமான நிறுவனங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென்றால் அங்கு நடைபெறும் மோதல்களின் உக்கிரத்தன்மையையும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் அபாயத்தன்மையையும் அது தெளிவாக காண்பிக்கின்றது. இது உண்மையிலேயே மிகவும் பாரதூரமான விடயமாகும் பெரும் எண்ணிக்கையிலான வன்னிமக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் சேவையாற்ற முடியாத என்ற நிலைமை காரணமாகவே இந்த மனிதநேய அமைப்புக்கள் வன்னியில் நிலைகொண்டிருந்தன. அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு அகதிகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகராலயம் உலக உணவுத்திட்டம் போன்றன உணவுவிநியோகத்தை மேற்கொண்டுவந்தன. அந்த நிறுவனங்கள் யாவும் தீடிரென விலக்கிக்கொள்ளப்பட்டால் மனிதநேய அமைப்புக்கள் இல்லாத நிலையில் அரசாங்கத்தால் அந்த இடைவெளியை ஈடுகட்டமுடியுமா என்பது தொடர்பில் தீவிரமான கேள்வி எழுப்பப்படும் அரசாங்கம் இந்தப்பணியை ஆற்றியே ஆகவேண்டும் ஏனெனில் அது அரசாங்கத்தின் கடமையாகும் வன்னிமக்கள் இந்தநாட்டின் பிரஜைகள் இவர்களை பாதுகாப்பதற்கு இயலுமான அனைத்தையும் அரசாங்கம் செய்தாகவேண்டும் மோதல்களால் பொதுமக்கள் அபாயத்திற்குள்ளாகமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவதும மக்களின் தேவைகளுக்கு போதுமான உணவு மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் மனிதநேய அமைப்புக்கள் அங்கே தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தால் அது மிகவும் அபாயகரமானதாகும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளது )











கேள்வி: கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதைப்போன்று வன்னியிலுள்ள மக்களையும் தம்மால் பராமரிக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பாக நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் ?

பதில் : வன்னிமக்களை பராமரிப்பதில் அரசாங்கத்திற்குள்ள பிரச்சனையாதென்றால் அங்குள்ளமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ளனர் அரசாங்கத்தின் நிர்வாக சேவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்துப்பாகங்களிலும் இயங்குகின்றபோதிலும் அரசாங்கத்திற்கு வன்னியில் நேரடிவழித்தொடர்பு கிடையாது விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அரசாங்கத்திற்கு மிகமிகக்குறைவாகவேயுள்ளது இதன்காரணமாகவே சர்வதேச மனிதநேயதொண்டுநிறுவனங்கள் வன்னியிலிருந்து பணியாற்றிவந்தன அந்தவகையில் வன்னியிலிருந்து மனிதநேய தொண்டுநிறுவனங்களை வெளியேறுமாறு விடுத்த உத்தரவு தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் என நான் நம்புகின்றேன் மனிதநேய தொண்டு நிறுவனங்கள் அங்கு தங்கியிருக்க தயாராக இருக்குமிடத்து அரசாங்கம் அவற்றை அங்கிருந்து வெளியேறுமாறு பலவந்தப்படுத்தப்படுத்தக்கூடாது அவர்களின் பாதுகாப்பையிட்டு அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளமை நல்லதென்றபோதிலும் மனித நேய தொண்டு நிறுவனங்களில் இணைபவர்கள் தமக்கு நேரக்கூடிய அபாயங்களை அறிந்தவர்களாகவே அதில் இணைகின்றனர் அத்தகைய மனிதநேயதொண்டு நிறுவனங்களைச்சேர்ந்தவர்கள் தமது விருப்பிற்கு அமைவாக அங்குதங்கியிருந்து பணியாற்ற முனையும் இடத்து அவர்கள் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டுமேதவிர அவர்களை பலவந்தப்படுத்தி வெளியேற்றக்கூடாது அந்தவகையில் அனைத்து மனித நேயதொண்டுநிறுவனங்களையும் வெளியேறுமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவை மீள்பரிசீலனைசெய்யும் என்று நான் நம்புகின்றேன் மனிதநேய தொண்டுநிறுவனங்களுக்கு நேரக்கூடிய அபாயம் தொடர்பாக எச்சரிக்கலாமமேயொழிய அவர்கள் அங்கு தங்கியிருக்க தயாராக இருப்பின் அவர்களுக்கு அனுமதியளிக்கவேண்டும் அடுத்ததாக மோதல்களால் பொதுமக்கள் பாதிப்புறாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் விடுதலைப்புலிகளுக்கு இந்தவிடயத்தில் முக்கியமான கடமையுள்ளது விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தாமல் பாதுகாக்கவேண்டும் அத்தோடு அவர்கள் ஆட்டிலறி எறிகணைகளை கொண்டுவந்து பொதுமக்கள் செறிந்துள்ள இடங்களின் நடுவிலிருந்து இராணுவத்தினரைநோக்கி ஏவாது இருக்கவேண்டும் ஏனெனில் எங்கிருந்து எறிகணை ஏவப்படுகின்றதென்பதை இராணுவத்தினால் கண்டறிந்துவிடமுடியும் அதன்பின்னர் இராணுவ்த்தினர் ; அதே இடத்தைநோக்கி பதிற்தாக்குதலை நடத்தினால் அதனால் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன பொதுமக்களை பயன்படுத்தாமல் தாம் எவ்வாறு யுத்தத்தை நடத்துவது என்பது தொடர்பில் விடுதலைப்புலிகளும் மிகவும் கரிசனைகொண்டிருக்கவேண்டும் இருதரப்பினருமே பொதுமக்களுக்காக யுத்தத்தை நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர் ஆனால் காயத்திற்குள்ளாக்கப்படாமலும் காவுகொடுக்கப்படாமலும் பொதுமக்களின் உயிர்களைப்பாதுகாப்பதே இறுதியில் முக்கியமானது

கேள்வி: சில நிறுவனங்களின் அரிசிச்சாக்குகள் புலிகளின் பதுக்குகுழிகளமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்க வன்னியில் அரிசியில்லை என அந்நிறுவனங்கள் பொய்பிரசாரத்தை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் மேலும் சில நன்கறியப்பட்ட சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்காக மருத்துவமனைகளை நடத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார் அந்தவகையில் அரசார்பற்ற நிறுவனங்கள் சில விடுதலைப்புலிகளுக்கு துணைபுரிகின்ற வகையில் செயற்பட்டமைக்கு போதிய சான்றுகளுள்ளதாக தேசியபாதுகாப்பிற்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ள இந்தக்குற்றச்சாட்டை எப்படிப்பார்க்கின்றீர்கள் ?
பதில்

இந்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் பதில்களை நான் இதுவரை கேட்கவில்லை மனிதநேய நிறுவனங்களது அரிசிச்சாக்குகளை பதுங்குகுழிகள் அமைப்பதற்காக விடுதலைப்புலிகள் எடுத்திருப்பின் அது பிரச்சனைக்குரியது ஏனெனில் சர்வதேச தொண்டுநிறுவனங்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்துசெயற்படுவதாக அரசாங்கத்தரப்பில் கருத்துநிலைப்பாடு காணப்படுகின்றது சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விடுதலைப்புலிகள் அவர்களது இராணுவத்தேவைகளுக்காக வாகனங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்துச்சென்றமை தொடர்பாகவும் சில வேளைகளில் இரவல் கேட்டுவாங்கிச்சென்றமை தொடர்பாகவும் கடந்தகாலத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது விடுதலைப்புலிகள் அவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது ஆனால் மக்களுக்கு சேவையாற்றுகின்ற மிகமுக்கியமான பணியில் மனிதநேயதொண்டுநிறுவனங்கள் ஈடுபட்டுள்ளநிலையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களையும் வெளியேறச்சொல்வதற்கு இந்தக்காரணத்தை அரசாங்கம் சாட்டாகப் பயன்படுத்தமுடியாது


கேள்வி : கிழக்கில் மனிதநேய இரர்ணுவநடவடிக்கையை மேற்கொண்டபோது மக்களைப்பராமரித்ததுபோன்று வடக்கிலுள்ள மக்களையும் தம்மால் பராமரிக்க தம்மால் முடியும் என அரசாங்கம் கூறுகின்றது இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்

வடக்கிலும் பார்க்க கிழக்கு சற்றே வித்தியாசமானது கிழக்கில் அங்குமிங்குமாக கணிசமானபகுதிகளில் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள் இருந்ததேயொழிய கிழக்கை விடுதலைப்புலிகள் ஒருபோதும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதோ அன்றேல் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ கிடையாது அந்தவகையில் ஏற்கனவே இருந்த விநியோக மார்க்கங்களுடாக அரசாங்கத்திற்கு மக்களுடன் பணியாற்றுவதற்கான வழிகள் அரசாங்த்திற்கு இருந்தன மாறாக வடக்கில் ; விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசமோ கிழக்கில் இருந்ததைப்பார்க்கிலும் மிகவும் பெரியதாகும்

அரசாங்கத்தின் விநியோக மார்க்கங்களும் அருகில் காணப்படவில்லை அந்தவகையில் மக்களுக்கு உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அது பிரச்சனையாக அமையும் என நான் கருதுகின்றேன் ஏற்கனவேயுள்ள அரசாங்கநிர்வாகக்கட்டமைப்புக்களை பயன்படுத்த அரசாங்கம் முற்படக்கூடுமாயினும் அதற்கு விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பையும் நாடவேண்டும் தற்போதைய யுத்த சூழ்நிலையில் அந்த ஒத்துழைப்புக்கிடைப்பது சாத்தியமற்றது அந்தவகையில் கிழக்கைப்போன்று வடக்கிலுள்ள மக்களுக்கும் உணவுப்பொருட்களை அனுப்புவது மிகவும் கடினமானது என நான் கருதுகின்றேன்


கேள்வி: மனிதநேய தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என கடந்தகாலங்களில் மேற்குலக பிரதிநிதிகள் மேற்கொண்ட விஜயங்களின் போது வலியுறுத்தப்பட்டநிலையில் அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானம் சர்வதேசத்தால் எவ்வாறு நோக்கப்படும் என நீங்கள் காண்கின்றீர்கள் ?

பதில்

அரசாங்கம் மனிதநேய தொண்டுநிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேற்ற எடுத்துள்ள தீர்மானம் சர்வதேச சமூகத்தால் சாதகமானமுறையில் பார்க்கப்படும் என நான் கருதவில்லை பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எவருமே விரும்பவில்லை சர்வதேச மனித நேயதொண்டு நிறுவனங்கள் அந்தபிரதேசத்தைவிட்டு வெளியேறுமிடத்து பொதுமக்கள் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் வாய்ப்புக்களுண்டு அங்கு என்ன நடைபெறுகின்றதென்பதை தெரிவிப்பதற்கு சுயாதீன சாட்சிகள் இருக்கமாட்டார்கள் அந்தமக்கள் தொடர்பாக அக்கறைகொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் அந்தவகையில் நடைபெறுகின்ற விடயங்களை சர்வதேச சமூகம் விரும்பவில்லை மறுபுறத்தில் இலங்கை ஒரு சுதந்திரமான இறைமையுள்ளநாடு என்ற வகையில் இதுவிடயத்தில் அவர்களால் அதிகமாக ஒன்றையும் செய்யமுடியாதநிலைகாணப்படுகின்றது இந்தநாட்டில் மனிதநேய தொண்டுநிறுவனங்கள் தாமாகவே வருகைதரவில்லை மாறாக அவை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே வந்துள்ளன மனித நேயநிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தமதுவிருப்பின் பேரில் இங்கு வரவில்லை அவர்களுக்கான விஸா உட்பட அனுமதியை இலங்கை அரசாங்கமே வழங்குகின்றது பொதுமக்களின் அக்க்றைகள் தொடர்பில் மிகவும் கவனமாக செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதைத்தவிர இந்தவிடயத்தில் மனித நேய தொண்டு நிறுவனங்களால் செய்வதற்கு வேறுமாற்றுக்கிடையாது அவர்கள் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதியும் ஆசிர்வாதமும் முக்கியமானது




கேள்வி :ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தற்போதைய நிலைமை எவ்வாறு பிரதிபலிக்கப்படும் ?

பதில் நிச்சயமாக இந்த விடயத்தில் மனித உரிமைகள் சமூகமானது அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்புவதுடன் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு சவால்விடும் ஏனெனில் அனைத்து மனித நேயதொண்டு நிறுவனங்களையும் எந்தவொரு இடத்திலிருந்தும் வெளியேறுமாறு கோருவதானது மிகவும் பாரதூரமானவிடயமாகும் அந்தவகையில் அரசாங்கம் கடுமையான சவால்களுக்கும் விமர்சனங்களுக்கும் முகங்கொடுக்கநேரிடும் என நான் கருதுகின்றேன் இந்தவிடயம் அரசாங்கத்திற்கு நல்லதாக அமையாது ஆனால் அரசாங்கம் இந்த வழியிலேயே முன்செல்வதற்கு உறுதிகொண்டிருப்பின் சர்வதேச சமூகத்தாலும் பெரிதாக எதனையும் செய்யமுடியாது தாம் உணவுமற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்களை அனுப்பிவைப்பதாகவும் மக்களை அந்த பகுதியிலிருந்த வெளியேறுமாறு அழைப்புவிடுத்துள்ளதாகவும் மக்கள் அந்தபிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் உண்மையில் விடுதலைப்புலிகளே மக்கள் மனிதநேய பாதுகாப்பு பாதைமூலமாக அந்தப்பிரதேசங்களில்
இருந்துவெளியேறுவதற்கு தடைவிதித்துவருவதாகவும் அரசாங்கம் தனது தரப்பில் நியாயப்பாடுகளை முன்வைத்துவாதாடக்கூடும் இந்தநிலையில் எந்தச்சாத்தியக்கூறுகளையும் நிச்சயமாக கூறமுடியாது நவீன உலகில் மக்களின் நலன் தொடர்பான பிரதான பொறுப்பு அரசாங்கத்திற்கேயுள்ளது உலகில் எந்தப்பகுதியிலேனும் எந்தஅரசாங்கமாவது தனது நாட்டுமக்களின் ஒருதரப்பினர் விடயத்தில் அக்கறைகாண்பிக்கவில்லை என சர்வதேச சமூகம் உணருமாயின் அதுதொடர்பில் தலையீடு செய்வதற்கான உரிமை சர்வதேச சமூகத்திற்குள்ளது ஆனால் இலங்கையிலுள்ள நிலைமை அந்தளவிற்கு மோசமானதென சர்வதேச சமூகம் காண்கின்றதா என்பதே தற்போதைய கேள்வியாகும் நிலைமை மோசமானதல்ல என அரசாங்கம் கூறுகின்றது இது குறுகிய கால நிகழ்வு விடுதலைப்புலிகள் மக்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் அதற்கு அனுமதிக்கமை அவர்களது தவறாகும் என அரசாங்கம் கூறுகின்றது இதனைப்பார்க்கின்றபோது நாம் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்

No comments:

Post a Comment