Tuesday, December 8, 2020

சுமார் 1 மீற்றரால் உயரம் கூடிய எவரெஸ்ட் சிகரம்... நேபாளம் - சீனா சொல்லும் புது கணக்கு!

 





மாறிவரும் உலகில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கூட மாறியிருக்கின்றது என்கின்றபோது வியப்பாக முடியாது. 8,848 மீட்டர் என்பதே இன்று வரையிலும் எவரெஸ்ட்டின் உயரமாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை வருடங்களில் பல காரணிகளால் எவரெஸ்ட்டின் உயரம் நிச்சயம் மாறியிருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலகின் மிக உயரமான மலை உச்சி எவரெஸ்ட். இமயமலைத் தொடரில் இருக்கும் இந்த மலை உச்சியின் உயரம் என்ன என்பதில் ஒரு தெளிவில்லாத சூழலே பல காலமாக நிலவிவந்தது. 1847-ல் ஒரு பிரிட்டன் நில அளவை குழு எவரெஸ்ட்டின் உயரம் (Peak XV என்று அப்போது அழைத்தனர்) 8,778 மீட்டர் என அளந்தது. 1849-க்கும் 1855-க்கும் நடுவில் தேராதூன் முதல் பீகாரின் சோனகோடா வரை பல இடங்களிலிருந்தும் கணக்கீடுகள் செய்யப்பட்டன. அதன் முடிவில் இந்த உச்சியின் உயரம் 8839.80 மீட்டர் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்தான் பிரிட்டனின் நில அளவை யாளர் ஆணையாளர் சேர் ஜோர்ஜ் எவரெஸ்ட்டின் பெயர் வைக்கப்பட்டு இது எவரெஸ்ட் சிகரமானது.

கடைசியாக 1954-ல் இந்திய நில அளவைத் துறை எவரெஸ்ட் உச்சியின் உயரத்தை அளந்தது. அப்போது எவரெஸ்ட்டின் உயரம் 8இ848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது. இதுதான் இன்று வரை எவரெஸ்ட்டின் உயரமாக உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உயரமானது திரிகோண முறையில் அளக்கப்பட்டது.

இதற்குப் பிறகு சீனாவும் மறுபுறத்திலிருந்து எவரெஸ்ட்டை அளக்கும் முயற்சிகளில் இருமுறை ஈடுபட்டது. 1975-ல் 8,848.13 மீட்டர் என்றும் 2005-ல் 8,844.43 மீட்டர் என்றும் அறிவித்திருந்தது.


ஆனால், 8,848 மீட்டர் என்பதே இன்று வரையிலும் எவரெஸ்ட்டின் உயரமாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தனை வருடங்களில் பல காரணிகளால் எவரெஸ்ட்டின் உயரம் நிச்சயம் மாறியிருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 2015-ல் நேபாளத்தை ஒட்டிய இமயமலை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதுவும் எவரெஸ்ட்டின் உயரத்தை மாற்றியிருக்கக்கூடும் எனக் கருதப்பட்டது. இதன் விளைவாக மீண்டும் எவரெஸ்ட்டின் உயரத்தை அளக்க முடிவெடுத்தது நேபாள அரசு. இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்நாட்டின் நில அளவைத் துறை இந்த பணிகளைத் துவங்கியது. மேம்பட்ட அளவை கருவிகளும். அதிநவீன முறைகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த பணிகளில் நேபாள அரசுக்கு மறுபுறத்திலிருந்த சீனாவும் உதவியது. இதனால் இம்முறை மிகவும் துல்லியமான உயரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நேபாளம் மற்றும் சீன அரசுகள் இணைந்து வேர்ச்சுவல் நிகழ்வு ஒன்றில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை அறிவித்தன. அதன்படி எவரெஸ்ட்டின் புதிய உயரம் 8,848.86 மீட்டர். முன்பைவிட சுமார் மூன்று அடி (0.86 மீட்டர்) அதிகரித்திருக்கிறது எவரெஸ்ட்டின் உயரம்.


No comments:

Post a Comment