Monday, December 14, 2020

எங்களது மனிதாபிமானம் எங்கே ? மாலைதீவில் இலங்கையர்களை நல்லடக்கம் செய்யும் முனைப்பு பற்றி அலி ஸாஹிர் மௌலானா கருத்து

 



கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லிம்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வது பற்றி அந்தநாட்டு அரசாங்கத்திடம் இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள், இலங்கை தொடர்பாக பிறர் இழிவாகப்பார்த்து சிரிக்கும் நிலையை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோயால் இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்வதென்ற கொள்கைகாரணமாக முஸ்லிம்கள் எழுப்பிய கரிசனைகளை அடுத்து இறந்தவர்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வதற்கு  முன்வந்துள்ளதாக இன்று திங்கட்கிழமை டெய்லிமிரர் பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரித்திருந்தது. இதுதொடர்பாக கடந்தவாரம் மாலைதீவு அரசாங்கம் உத்தியோகபூர்வ தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்திருந்ததாகவும் அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 




இதுதொடர்பாக வினவியபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறைக்கு எதிராக அமைதிவழியான சிவில் போராட்டங்களுக்கு தலைமை வகித்துவருபவருமான அலி ஸாஹிர் மௌலானா கருத்துவெளியிடுகையில்,

"நாங்கள் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் நாங்கள் ஒரு காலத்தில் சொல்லுவோம் இந்த மண்ணில் பிறந்தோம். இந்த மண்ணில் வளர்ந்தோம். இந்த மண்ணிலே மடிவோம் என்று நாட்டுப்பற்றுடன் இருந்தவர்கள் இருப்பவர்கள் நான் வெளிநாடுகளில் படித்திருக்கின்றேன். பயணம் செய்திருக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட காலத்திலே எனக்கு இங்கு அச்சுறுத்தல் இருந்தபோது கூட வெளிநாட்டிற்கு போய் இருந்தாலும் எப்போது இந்த நாட்டிற்கு மீண்டும் வருவேன். என்று வந்தேன். மற்றவர்கள் எல்லாம் போனால் என்னுடைய படிப்பு என்னுடைய ( தகைமை ) இது அடிப்படையிலே அங்கு எனது குடும்பமும் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டை நாங்கள் அந்தளவிற்கு நேசிப்பவர்களாக இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் மீண்டும் இங்கே வந்து இந்தமண்ணிலேதான் வாழ்வோம் கடைசி மூச்சிருக்கும் வரை வாழ்வோம். எங்களது சேவைகளை ஆற்றுவோம். மடிவோம் என்ற நல்லெண்ணத்துடன் தான் நாங்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட நாங்கள் முகங்கொடுக்கின்ற இந்த விசயம். இதெல்லாம் மற்றவர்கள் பார்த்து சிரிக்கக்கூடிய எங்களை இழிவாகப் பார்க்கக்கூடிய ஒருவேடிக்கைத்தனமான விசயங்களை எல்லாம் இன்று பார்க்கின்றோம். மாலைதீவில் எங்களின் உடல்களை அங்கு நல்லடக்கம் செய்வதற்கு  இதெல்லாம் பார்க்கின்ற நேரத்திலே மனிதாபிமானம் எங்கே? எங்களது மனிதாபிமானம் எங்கே ? வெறும் அரசியல் காரணத்திற்காக இந்தளவிற்கு நாங்கள் போகலாமா? ஆட்சியில் இருந்தாலும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருப்பது? ஆட்சியில் இருப்பது முக்கியமல்ல நாங்கள் சென்றுவிட்டாலும் மடிந்துவிட்டாலும் இப்படியான நேர்மையான செழுமையான நீதியான ஆட்சியைச் செய்தவர் என்று சரித்திரம் கூறவேண்டும். இன்று வரலாற்று துரோகங்களைப் பலர் செய்துகொண்டிருக்கின்றனர். "






இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை மாலைத்தீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தை மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் உறுதிப்படுத்தியுள்ளார்.


இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.


கொவிட் வைரஸ் சவாலை எதிர்நோக்கியுள்ளதை அடுத்துஇ அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment