Thursday, December 3, 2020

"நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது"

 



நீதி தாமதமாவது நீதி பறிக்கப்படுவதற்கு சமனானது என்ற வாசகம் உலகளவில் நன்கறியப்பட்டதாகும் .

19ம் நூற்றாண்டில் நான்கு தடவைகள் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த வில்லியம் எவார்ட் கிளட்ஸ்டோன் தான் இந்த வாசகத்தை முதலில் பிரபலப்படுத்தியவராக குறிப்பிடப்படுகின்றார். 

உலகப் புகழப்பெற்ற அமெரிக்க மனித உரிமை போராளியான மார்ட்டின் ஜுனியரும் இந்த வாசகத்தை பல தடவைகள் தனது போராட்ட உரைகளின் போது பயன்படுத்தியுள்ளார். 



21 புதிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது' என்ற பழமொழியை மேற்கோள் காட்டி சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். 

மேலும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாகவும் நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால்,அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். 

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்தமை பெருமை அளிக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.

நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால் அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். 

ஆனால் நீதிச் செயற்பாட்டில் இலங்கையிலுள்ள மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் நம்பிக்கையிழந்துவருவதை மக்களின் தலைவர்களின் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் புலப்படுத்திநிற்கின்றன. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களை  அவரவர் மத நம்பிக்கைகளுக்கு  அமைவாக சுகாதார விதிமுறைகளின் படி தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ முடியும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை உலகில்  ஏறத்தாழ இருநூறு நாடுகள் பின்பற்றிவரும் நிலையில் இலங்கையில் தகனம் செய்ய மட்டுமே முடியும் என்ற தீர்மானம் முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டுள்ளது. இதற்காக  நீதிமன்றததை நாடியவர்கள் தற்போது நீதியின் மீது  நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்திவருகின்றமையைக் காணமுடிகின்றது.




 இவ்வாறு நம்பிக்கையீன்மையை வெளிப்படுத்துகின்றவர்கள் அதி தீவிர மதவாதிகளோ இனவாதிகளோ அல்லர். சமூகத்தில் நன்மதிப்புடையவர்கள் . இந்த நாட்டை தமது சொந்த நாடாக நேசித்து வேறுநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பிருந்தும் இந்த நாட்டில் தமது வாழ்க்கையை கொண்டுநடத்துகின்றவர்கள் என்கின்றபோது எதிர்காலம் தொடர்பாக ஆழ்ந்த கவலைகள் எழுகின்றன. 

இன்றையதினம் இலங்கையிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித்  நீதி தாமதிக்கப்படுகின்றமை தொடர்பாக தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். 


கொழும்பில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில், அதற்கான பொறுப்பை வேறொரு தரப்பிடம் கையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்ததாக சுட்டிக்காட்டிய அவர்,அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காகவும், டீல் கலாசாரமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவதற்காகவும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற விதத்தில்இ இந்த சம்பவத்தின் பின்னணியை மறைக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமது ஆட்சியதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் தமது சொத்துக்களை அதிகப்படுத்திக்கொள்வதற்காகவுமே செயற்பட்டுள்ளன என்பதற்கு வரலாறு சான்றுபகர்கின்றது. 

20வது திருத்தத்தின் மூலம் அதிக சக்திவாய்ந்த ஜனாதிபதியாக மாறியுள்ள கோட்டபாய ராஜபக்ஸ புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தபின் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது போன்று மக்கள் மத்தியில் நீதியின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமானால் நீதித்துறை செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும். தராதரமோ இன மத மொழி பேதங்களோ இன்றி நீதி அனைவருக்கும் சமனான வகையில்  நிலை நாட்டப்படவேண்டும். அப்போது தான் இலங்கை சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நோக்கிப் பயணிக்க முடியும்.  அப்படியின்றி நீதி மறுக்கப்பட்டாலோ தாமதிக்கப்பட்டாலோ இந்த நாட்டின் எதிர்காலம்?


No comments:

Post a Comment