Monday, December 28, 2020

எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பீல்ட் மார்ஷல் பட்டங்கள் வழங்கப்படும் சாத்தியம்?



 பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆகியோர்  இராணுவ  ஜெனரல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். 

இராணுவத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக ஓய்வுபெற்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.இதன்படி மேஜர் ஜெனரல் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள லெப்டினற் ஜெனரல் பதவிக்கு ஒரு படி மேலுள்ள ஜெனரல் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை டபுள் புரமோஷனாக அமைந்துள்ளது. 



இதேவேளை இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

வழமையாக இராணுவத்தளபதி பதவியில் இருப்பவர்கள் லெப்டினற் ஜெனரல் தரத்தில் இருப்பதுண்டு. முதன் முறையாக பதவியில் இருக்கும் போதே ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்ட இராணுவத்தளபதி என்ற பெருமையை சவேந்திர சில்வா பெறுகின்றார்.  இவருக்கு முன்னர் இராணுவத்தளபதிகளாக இருந்தவர்களில் சரத் பொன்சேகா தவிர அனைவருமே ஓய்வுபெற்ற பின்னரே ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டனர். 

பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பு எனும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் (28) ஜனாதிபதியினால் இவ்வாறு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகஇராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா பதவியில் இருக்கும்போதே ஜெனரல்  தரத்திற்கு உயர்த்தப்பட்டமையானது இலங்கையில் எதிர்காலத்தில் இன்னுமொரு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படும் சாத்தியப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில் இராணுவத்தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது தற்போதுள்ள தரத்தில் இருந்து மற்றுமொரு படி உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வுவழங்கப்படுவது  வழமை. அந்தவகையில் இராணுவத்தில் அதி உயர் பதவியாக கருதப்படும் பீல்ட் மார்ஷல் பதவியே ஜெனரல் பதவிக்கு அடுத்ததாக காணப்படுகின்ற நிலையில் சவேந்திர சில்வா ஓய்வுபெறும் போது அது வழங்கப்படும் சாத்தியம் அதிகமாகும்.

இலங்கையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவருக்கு  இராணுவத்திலேயே அதி உயர் பட்டமாக கருதப்படும் பீல்ட் மார்ஷல் பட்டம் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



No comments:

Post a Comment