Wednesday, December 2, 2020

புதிதாக உருவாகும் அரசியல்யாப்பு நிலையானதாக இருக்க வேண்டியது ஏன் அவசியமானது?

 


இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் தேவை தொடர்பாக நீண்ட காலமாக விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை நிறைவேற்ற எந்தவொரு அரசாங்கமும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

1978 அரசியலமைப்பு 20 தடவை திருத்தப்பட்டுள்ளது. நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு அரசியலமைப்பொன்று எப்போதுமே உருவாக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அதிகாரத்துக்கு வந்துள்ளது. இவ்வேளையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளை பெறுவதற்காக அறிஞர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளது.

அவ்வாறு கருத்துகளை பெறும் வேளையில் குழுவானது கவனத்திற் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துகளைக் கேட்பது அவசியமாகும். தற்போதைய கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் அதில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. மக்கள் கருத்துகளை வழங்க இம்மாதம் 30ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் போதுமானதல்ல. அதற்கு போதுமான காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் ஆட்சி நடத்திய அரசாங்கங்களும் இவ்வாறான பொதுமக்களின் கருத்தை வினவும் குழுக்கள் பலவற்றை நியமித்திருந்தன. அதேவேளை 2000ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்திலும்,2006ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்திலும் இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதைத் தவிர 2017ஆம் ஆண்டு லால் விஜயநாயக்க குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இத்தகைய எந்தவொரு குழுவாலும் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே இந்த சட்ட வரைவை தயாரிக்கும் போது மக்களின் நம்பிக்கையைப் பெறக் கூடிய வகையில் அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெறக் கூடிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் போது அதற்கு முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் காரணம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதிக்கு கீழும் அந்தளவு பெரும்பான்மை கிடைக்கவில்ல. புதிய அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கைநழுவ விடக் கூடாது. இச்சந்தர்ப்பம் அரசியலமைப்பை தயாரிப்பதற்கான சரியான நேரமெனக் கூற வேண்டும்.

நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய அனுபவங்களை கருத்தில் கொண்டு அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை தயாரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு எல்லா இனத்தினரதும் உரிமை மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பரந்துபட்ட கருத்துகள் பெறப்பட்டு, அவர்களின் கௌரவம் குறித்தும் மிகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் விருப்பம் மற்றும் தற்காலிக பிரச்சினை தொடர்பாக மாத்திரம் கருத்தில் கொள்ளாது, ஒரே நாடாக நீண்ட கால நோக்குடன் கூடியதாக மக்கள் விருப்பத்தை முதன்மையாக கொண்டவாறான அரசியலமைப்பொன்றை தயாரிப்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் விசேடமாக கவனத்தைச் செலுத்த வேண்டிய விடயங்கள் 30 வருட காலமாக நாட்டில் நடந்த யுத்தம் போன்று ஆயுதப் புரட்சிகள் இரண்டு உருவான நிலைமையே ஆகும். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அவ்வாறான நிலைமை நாட்டில் மீண்டும் உருவாகாத வகையில் செயல்பட வேண்டும். சமூகத்தில் அனைவரினதும் உரிமைகள் பேணப்பட வேண்டும். அதற்கான அரசியலமைப்பு ஒன்று மக்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட வேண்டும். மக்களின் அனைத்து கவனமும் கொவிட் தொற்றிலிருந்து தப்புவது எப்படி என்றே உள்ளது. அதனால் அரசியலமைப்பு பற்றிய கருத்தை பெற்றுக் கொள்வதற்கு பாரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும். அதேபோல் அதிகளவு காலஅவகாசமும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.மாவட்ட ரீதியில் அதற்கான ஏற்பாட்டினை செய்து கொடுப்பது மிக முக்கியமாகும்.

நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பினைத் தயாரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பைப் போன்று கட்சி எதிர்க் கட்சி அரசியல் பிரதிநிதிகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்நடவடிக்கையின் போது அனுபவமுள்ள சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமாகும். அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ புதிய அரசியலமைப்பைத் தயாரிக்க முடியாது. அதேவேளை அனைத்து சமூகத்திலும் உள்ள மக்களின் கருத்துகள். யோசனைகள் மூலமே அது தயாரிக்கப்பட வேண்டும். விசேடமாக அனைவரினதும் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.

அதே போல் அனைத்து மக்களிடையேயும் இலங்கையர் என்ற கொள்கையை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகளில் மாத்திரம் தங்கியிராது விசேடமாக மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க வேண்டும். இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே அரசியலமைப்பு மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று நிலையான அரசியலமைப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். நாட்டின் முக்கிய ஆவணம் அரசியலமைப்புச் சட்டமாகும். அதை நாட்டுக்கு சிறந்த ஆவணமாக ஆக்கிக் கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.


No comments:

Post a Comment