Monday, November 16, 2020

நூறு நாட்கள் கழிந்தும் தீர்வின்றித் தொடரும் ஐதேக தேசியபட்டியல் விவகாரம்!



கடந்த ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கையின் பழம் பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாக எவ்வித ஆசனங்களும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில்  குறைந்தபட்சம் 5 சதவீதமான வாக்குகளைப் பெற்றதையடுத்து அக்கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் நிறைவடைந்து 100 நாட்கள் ( நவம்பர் 14ம்திகதி 100 நாட்களாகியது) கடந்துவிட்ட போதும் இன்னமும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் வெளியிடப்பட்டவில்லை. 

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரமுகர்களிடம் இதுதொடர்பாக வினவியபோது  அடுத்த வருடத்தில் தான் இதற்கான தீர்வு காணப்படும் சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.  கால அவகாசம் இன்றி தேசியப்பட்டியலுக்கான பிரதிநிதியை நியமிப்பதை கட்சிகள் தாமதப்படுத்த முடியுமா என்று வினவியதற்கு பதிலளித்த விடைபெற்றுச் செல்லும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர் ரட்ணஜீவன் ஹுல் இது விடயத்தில் எவ்வித சட்டங்களிலும் சுட்டிக்காட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.



தேசியப்பட்டியலுக்கான பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி மாத்திரமல்ல தேரர்களின் கட்சி எனப்படும் எமது மக்கள் சக்தி     (OPPP) யும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment