Friday, November 6, 2020

வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன் !அமெரிக்க வரலாற்றில் முதன் பெண் உப ஜனாதிபதியாகிறார் கமலா ஹரிஸ்

 


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக  உப ஜனாதிபதி பொறுப்பை ஏற்கும் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை கமலா ஹரிஸ்  புரியவுள்ளார். 



அண்மைக்கால வரலாற்றில் மிகவும்  போட்டித்தன்மைமிக்கதாக அமைந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக்கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பிற்கும் ஜனநாயக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் உப ஜனாதிபதியானுமான ஜோ பைடனுக்கும் இடையே பலத்த போட்டி காணப்பட்டது. 

நவம்பர் 3ம் திகதி தேர்தல் நடைபெற்ற நிலையில் வழமையாக நவம்பர் 4ம் திகதியே முடிவுகள் தெரிந்துவிடும் ஆனாலும் முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, ஜோர்ஜியா  நெவேடா ,விஸ்கோஷ்ஸின், மிச்சிகன் போன்றவற்றில் வாக்குகளை எண்ணும் பணிகள் தாமதமாகியமையால் இன்னமும் இறுதி முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. ஆனாலும்  ஜோர்ஜியாவிலும் தற்போது சில நிமிடங்களுக்கு முன்பாக பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருப்பதால் இன்னமும் சில மணிநேரங்களில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. 

ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் போது  உப ஜனாதிபதியாக  கமலா ஹரிஸ் பொறுப்பேற்பார் .



 ஜோ பைடன், தனது உப ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக இருக்கும் கமலா ஹரிஸை இவ்வாண்டு ஒகஸ்ற் மாதம் 11ம் திகதி பெயரிட்டிருந்தார் .  ஜோ பைடன். கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் சட்டமா அதிபராக 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை விளங்கிய கமலா ஹரிஸ் சிறந்த சட்டப்புலமை கொண்டவர் .

2017ம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்பதவிக்கு தெரிவான  முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையைத்தனதாக்கியிருந்தார்.  


அமெரிக்க ஜனநாயக்கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில் 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பெயரையும் பதிவுசெய்து ஆரம்பத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கமலா ஹரிஸ் பின்னர் குறைவான ஆதரவுகாரணமாகவும் விமர்ச்சனங்கள் காரணமாகவும் அதிலிருந்து விலகிருந்தார். 

55 வயதுடைய கமலா ஹரிஸின் தந்தை ஜமெய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர். .1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர்  கமலா தேவி ஹரிஸ் என்பதாகும். 

மாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார். 

 தந்தையின் பெப்டிஸ்ற் கிறிஸ்தவ மதப்பின்புலத்திலும் தாயின் இந்துமதப்பின்புலத்திலும் தனது இளமைக்காலத்தில் வளர்க்கப்பட்ட கமலா ஹரிஸ் தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



கமலாவின் தாயாருடைய பெயர் சியாமளா கோபாலன் . மார்பக புற்றுநோய் பற்றிய விஞ்ஞானியான அவர் 1960ம்ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment