Monday, November 9, 2020

முடிவிற்கு வந்துவிடுமா கொரோனா அச்சுறுத்தல்? நம்பிக்கையளிக்கும் தடுப்புமருந்து செய்தி!

 


உலகில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களைப்பாதித்து 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் பலியெடுத்துள்ள கொரோனா  வைரஸ் குறித்த அச்சுறுத்தலால்  பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இன்று ஆறுதல் அளிக்கும் செய்தி  கிடைக்கப்பெற்றுள்ளது.

முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் 'இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்'' எனத் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.




இந்த மாத ஆரம்பத்தில், இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அவசர ஒப்புதலை வழங்கும் அனுமதிக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

தடுப்பு மருந்து மற்றும் தேவையான நல்ல சிகிச்சை - இதுதான் இந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் டஸின் கணக்கான தடுப்பு மருந்துகள் உள்ளன. ஆனால் விளைவுகள் வெளிப்படுத்திய முதல் தடுப்பு மருந்து இதுதான்.

வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்ற முழு பரிசோதனை முறையை இது பயன்படுத்துகிறது.

மூன்று வார இடைவெளியில் இரண்டு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ள நேரிடும். அமெரிக்காஇ ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டாம் முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு 90 சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது தெரியவந்தது

இந்த வருட முடிவிற்குள் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை விநியோகிக்க முடியும் என பிஃபிசர் நிறுவனம் நம்புகிறதுஇ மேலும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டோஸ் மருந்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மருந்தைச் சேமித்து வைப்பதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஆம் இந்த மருந்தை மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் தான் வைக்க வேண்டும்.

பிஃபிசர் நிறுவனத்தின் தலைவர் இதுகுறித்து பேசுகையில் 'இந்த சர்வதேச சுகாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர உலக மக்களுக்கு உதவும் ஒரு முக்கிய பாதையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்' என தெரிவித்தார்.

பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான உகர் சஹின் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் எனத் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தரவுகள் இறுதியான தரவுகள் அல்ல. இந்த தரவுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் செயல்பாடு குறித்த விளக்கம் முழு முடிவுகளும் ஆராயப்பட்ட பிறகு மாற்றம் அடையலாம்.

பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள், கண்காணிப்பாளர்களிடம் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு செல்வதற்கான போதிய பாதுகாப்பு தகவல்களை நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெற்றிருக்கும்.

இருப்பினும் இந்த நிறுவனங்களின் அறிவிப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 'இந்த செய்தி என்னை மனதார மகிழ்ச்சி அடைய செய்தது' என்கிறார் ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஹார்பி.

'நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போது வந்துள்ள செய்தி நிம்மதியைத் தருகிறது. இது ஒரு முக்கிய தருணம்' எனத் தெரிவிக்கிறார் பீட்டர்.

பிரிட்டனின் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றும் மருந்து தயாரானதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி ; பிபிசி செய்திச் சேவை 

No comments:

Post a Comment