Friday, November 6, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பற்றி உலக மக்கள் ஏன் அதிக அக்கறை கொள்கிறார்கள்?

 


கடந்த சில நாட்களாக உலகில் பலரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவதற்கு பேரார்வம் காண்பித்துவருகின்றார்கள். தேர்தல் உள்நாட்டில் நடக்கும் போது இல்லாத ஆர்வம் கொரொனாவால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் இந்நாட்களில் அமெரிக்க தேர்தல் மீது ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய், போர்கள்  மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தும் பதவி அமெரிக்க ஜனாதிபதிப் பதவி.

அதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அமெரிக்க தேர்தல் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாக எளிய முறையில் பார்க்கலாம்.

                               தேர்தல் எப்போது? யார் யார் வேட்பாளர்கள்?

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்க தேர்தல் நடைபெற்றது 

பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒன்று அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது ஜனாதிபதியாக  இருக்கும் டொனால்ட் டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின்  ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர்.

தாராளவாத கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன்  ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதியாக பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

இந்த இரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்ட் டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை  ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான  ஜனாதிபதியாக  அவர் இருப்பார். அவருக்கு வயது 78.


யாரெல்லாம் வாக்களிக்க முடியும்? வாக்களிப்பது எப்படி?

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவருக்கு 18 வயது முடிந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியும்.

எனினும் பல மாநிலங்கள் ( states) வாக்களிக்கும் முன்னர் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன.

வாக்காளர் மோசடியை தடுப்பதற்கு இவற்றை கொண்டு வருவது அவசியமாகிறது என குடியரசுக் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் இதை வாக்காளர்களை ஒடுக்கும் செயல் என குறிப்பாக ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள அட்டை இல்லாத ஏழை மற்றும் சிறுபான்மையின வாக்காளர்களை ஒடுக்கும் செயல் என ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறைக்கைதிகள் வாக்களிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதிகள் வைத்துள்ளன.

பெரும்பாலும் சிறை தண்டனை பெற்ற கைதிகள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். தண்டனை காலம் முடிந்த பிறகு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் சமீப ஆண்டுகளில் வேறு சில முறைகளும் கொண்டுவரப்பட்டன. 2016ஆம் ஆண்டு 21 சதவீத மக்கள் தபால் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

இந்த ஆண்டு கொரோனா உலகத் தொற்று காரணமாக மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற விவகாரம் ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. அஞ்சல் வாக்கு சீட்டுகளை பரவலாக பயன்படுத்த வேண்டும் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இது வாக்காளர் மோசடியை அதிகரிக்கும் என ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.

இந்த தேர்தல் ஜனாதிபதியை  தேர்ந்தெடுக்க மட்டுமா?



இல்லை. அனைவரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் பைடன் மீதுதான் இருக்கும்.

ஆனால் வாக்காளர்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினர்களையும் இத்தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள்.

நாடாளுமன்றம் ஏற்கனவே ஜனநாயக கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது செனட் சபையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கவனம் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

இரு அவைகளிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் மீண்டும் டிரம்ப் ஜனாதிபதி ஆனால்கூட அவருடைய திட்டங்களை தடுக்கவும் தாமதப்படுத்தவும் ஜனநாயக கட்சியினரால் முடியும்.


முடிவுகள் எப்போது தெரிய வரும்?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

2016ஆம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் ஜனாதிபதி டிரம்ப்.

ஆனால் இந்த ஆண்டு தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.



சில வாரங்களுக்கு முன்னரே ஜனநாயகக்கட்சியின் முக்கியஸ்தர் பேர்ணி சாண்டர்ஸ் இப்படியான நிலைவரும் எச்சரித்திருந்தார். 



வெற்றியாளர் ஜனாதிபதி பொறுப்பு ஏற்றுக் கொள்வது எப்போது?


இம்முறை தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் டிரம்பின் இடத்திற்கு அவர் உடனடியாக வரமாட்டார். புதிய அமைச்சர்களை நியமனம் செய்யவும் திட்டம் தீட்டவும்இ அவருக்கு சிறிது காலம் வழங்கப்படும்.

வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20ஆம் திகதியன்று புதிய ஜனாதிபதி அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக்கொள்வார்.

அதனைத் தொடர்ந்து தனது நான்கு ஆண்டு காலப் பணியைத் தொடங்க புதிய ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

நன்றி; பிபிசி செய்திச் சேவை 


No comments:

Post a Comment