Monday, November 23, 2020

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக அந்தனி பிளின்கென் நியமிப்படும் சாத்தியம்!







அடுத்தாண்டு ஜனவரியில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் போது அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளராக Antony Blinken அந்தனி பிளின்கென் நியமிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 




சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என பல தசாப்தங்களாக செயற்பட்டுவருபவரான அந்தனி பிளின்கென் ஜோ பைடன் செனட்டராக இருந்த காலமுதலே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக செயற்பட்டுவருகின்றவர். ஜோ பைடன் அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்த போது அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக திகழ்ந்த பிளின்கென் பின்னர் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பிரதி இராஜாங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகால நிர்வாகத்தில் சர்வதேசத்தில் இருந்த தனிமைப்பட்டிருக்கின்ற அமெரிக்க வெளியுறவுக்கொள்கைகாரணமாக உலக அரங்கில் அமெரிக்காவின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கங்களிலிருந்தும் பின்னடைவுகளில் இருந்தும் மீண்டெழுவதற்கு  அந்தனி பிளின்கெனின் நியமனம் வழிவகுக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  இதேவேளை சில ஊடகங்கள் அந்தனி பிளின்கென் பெரும்பாலும் அடுத்த இராஜாங்க செயலாராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கின்றது அப்படி நடக்காது போனால் அதற்கு ஈடானதாக கருதப்படும் முக்கிய பதவியான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு அவர் நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளன. 



நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெற்ற தேர்தலில் அமெரிக்காவின் 46வது ஜனாதபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான தேர்தல் மன்றக் கல்லூரி வாக்குகளை ஜோ பைடன் பெற்றுவிட்டபோதும் தொடர்ச்சியாக  நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும் இதர வழிகளிலும் அவரின்  வெற்றியைத்தடுத்து நிறுத்த தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இருப்பினும் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அந்த முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில்  ஜோ பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. 

No comments:

Post a Comment