Wednesday, November 25, 2020

இறுதிப் போர் நாட்களில் சமூக வலைத்தளங்கள் தற்போது போன்று இருந்திருந்தால் நீதி கிடைத்திருக்குமா?

 



சமூக வலைத்தளங்களின் பயனாக சமூகத்தில் அநியாயங்களுக்கு நீதி கிடைக்கும்  வாய்ப்புக்கள் அதிகம் என்பதற்கு இலங்கையில் இன்றைய தினம் நடைபெற்ற கைது சான்றாகும் 

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று (24) வைரலாக பரவியது.



இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார்.

இன்று (25) முற்பகல் தொடர்பில் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சமூக வலைத்தளங்கள் இல்லாத விடத்து பொலிஸாரும் அதிகாரிகளும் இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குறியாகும்.  சமூக ஊடகங்களில் கண்டனக்குரல்கள் பலமாக எழுப்பப்பட்டு  அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் இது தெரியப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறான துரித நடவடிக்கை சாத்தியமானது. இதற்கு முன்னரும் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பல அநீதிகளுக்கு துரிதமாக விடை கிடைத்திருந்தது.


கடந்த ஜுன் மாதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தர்கா நகரைச் சேர்ந்த 14வயதுச் சிறுவன் அஹமட் தாரிக் கடந்த ஜுன் மாதத்தில் தாக்கப்பட்ட போதும் சமூக ஊடகங்களில் அது தொடர்பான காணொளி வெளியாகி நீதிக்கான கோரிக்கை விரைவுபடுத்தப்பட்டது நினைவிருக்கும்.

ஆனால் இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களாக குற்றஞ்சாட்டப்படுகின்ற  இறுதிப் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதுவரை நீதி கிடைக்காமையை பார்க்கின்ற போது ஒருவேளை இன்று போல் சமூக வலைத்தளங்கள் இருந்திருப்பின்  நீதியை விரைவுபடுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. 

நேற்றையதினமும் கூட பாராளுமன்றத்தில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. 



இறுதிப்போரில்  போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த போது குறுக்கிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்  ' இறுதிப்போரில் எவ்விதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று நீங்கள் மிகவும் நம்பிக்கையோடு கூறுகின்றீர்கள். தமிழ் மக்களுக்கு நன்மை செய்ததாக கூறுகின்றீர்கள். அப்படியானால் ஏன்  சர்வதேச விசாரணைக்கு அச்சப்படுகின்றீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மிகவும் கோபாவேசத்துடன் இராஜாங்க அமைச்சர் பதிலளித்திருந்ததுடன் தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை  என்று கூறியிருந்தார். 

இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்த்தலைவர்கள் கருத்தக்களைக் கூறுகின்ற போது சிங்கள ஆட்சியாளர்கள் அதனைத் தட்டிக்கழிப்பது மட்டுமன்றி ஒன்றுமே இடம்பெறவில்லை  என்று கூறவதுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கு முரணாக ஒரு கையிலே மனித உரிமைகளையும் மறுகைதியே ஆயுதத்தையும் தரித்துக் கொண்டே யுத்தம் செய்ததாக கூறிவருவதனையும் கடந்த காலத்தில் இருந்து கண்ணுற்றுவருகின்றோம்.

  சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இறுதிப்போர் தொடர்பாக கூறிவரும் கருத்துக்களை சிங்கள மக்களில் பெரும்பான்மையானோரும் நம்புவதைப் பார்க்கும் போது ஒருவேளை இன்றிருப்பது போன்று அந்தக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் பாவனை அதிகமாக இருந்திருப்பின் அவற்றின் மூலமாக அநீதிகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டிருந்தால் அதனை நம்பியிருப்பார்களோ என்ற கேள்விகள் தோன்றுகின்றது. 

ஃபேஸ்புக் 2004ம் ஆண்டிலும் டுவிட்டர் 2006ம் ஆண்டிலும் அமெரிக்காவில் அறிமுகமானாலும் இலங்கையில் அவற்றில் வரவு குறிப்பாக டுவிட்டரின் பரவல் இறுதியுத்த காலத்தில் போதுமானதாக இருக்கவில்லை. இணையத்தளங்கள் இருந்தபோதும் அநீதிகளை உடனுக்குடன் காட்சிப்படுத்தி பதிவிடுவதற்கான வாய்ப்பு இறுதியுத்தம் இடம்பெற்ற நாட்களில் இருக்கவில்லை.  சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகள் போர்க்களத்தில் நின்ற படைவீரர்கள் உட்பட தரப்பினரது கைப்பேசிகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டன. அதனைப்பார்த்தபோதே சிங்களத்தரப்பில் சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர் . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரணதுங்க சனல்  4 காணொளியைப் பார்த்துவிட்டு இலங்கையைராக இருப்பதற்கு தாம் வெட்கப்படுவதாக கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இறுதிப்போர் நடைபெற்ற நாட்களில் தற்போதுள்ளது போன்று சமூக வலைத்தளங்களில் பரவுகை அதிகமாக இருந்திருந்தால்  ஒருவேளை  தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைக்கு  சிங்கள மக்களிடத்தில் இருந்தும் அதிகமான ஆதரவும் அழுத்தமும் கிடைத்திருக்குமோ என எண்ணத்தோன்றுகின்றது. 

No comments:

Post a Comment